Wednesday, July 27, 2005

பெண் சுதந்திரம்

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம். கிருபாகரன் என்று ஒரு தமிழ் வாத்தியார் இருந்தார். வகுப்பில் காமெடியாக பேச தெரியாவிட்டாலும் நன்றாகதான் எடுப்பார். ஆனால் எனக்குதான் எப்படி முயற்சி பண்ணினாலும் தூக்கம் வந்துவிடும். ஒரு முறை அவர் ரெம்ப கோபமாக "ஏம்பா திருமலை உன்னால வகுப்பை அட்டென்ட் பண்ண முடியாட்டி வெளிய போயிடு" அப்படின்னார். எனக்கு செருப்பால் அடிச்ச மாதிரி இருந்தது.

அதன்பிறகு தூங்காமல் பாடம் கவனிக்க கற்றுக்கொண்டேன் ஆனாலும் அவர் எப்போதும் ஒரு முறைப்பாகத்தான் என்னை பார்ப்பார். இந்நிலையை ஒரு சந்தர்ப்பம் மாற்றியது. ஒருமுறை சிலப்பதிகாரம் வகுப்பு எடுத்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கேள்வியை கேட்டார்." கண்ணகி கதாபாத்திரம் எதனை உணர்த்துகிறது" என்று. சிலர் தமிழ்நாட்டு கலாசாரத்தை என்றனர். சிலர் பெண்ணின் மேண்மையை என்றனர். நான் சடாரென எழுந்து "ஆணாதிக்க இலக்கியத்தை" என்றேன்.
எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக் பார்த்தனர். ஆனால் அவர் "திருமலை சொல்வது சரிதான்" என்றார்.

அதன்பிறகு எங்களுக்குள் ஒரு நல்ல உறவு உருவானது, ஆனால் இந்த விஷயத்தை பற்றி அதன் பிறகு நாங்கள் என்றுமே பேசியதில்லை. ஆனால் அவ்விடை என்னுள் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணியது. எப்படி அந்த விடையை சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. பிறகு நான் படித்தவைகளும் எனக்கு அதைதான் உணர்த்தியது.

ஆனாலும் என்னை மிகவும் பாதித்தது எங்கள் வகுப்பில் இருந்த பெண்களின் ரியாக்ஷன். யாருக்குமே நடந்தது தெரிந்த மாதிரி தெரியவில்லை. ஒருவேளை எல்லோரும் விழித்துகொண்டே தூங்கிகொண்டிருந்தனரோ என்னவோ?

சிலகாலம் கழித்து டிவியில் "அவள் அப்படித்தான்" படம் போட்டிருந்தார்கள். அதில் கமல் ஒரு நிருபராக நடித்திருப்பார். அவர் எந்த பெண்ணை பார்த்தாலும் "பெண்களின் சுதந்திரத்தை பற்றி என்ன நினைக்கீறீங்க" என்று கேள்வி கேட்பார். சிறீபிரியா ஒரு முற்போக்குவாதியாக் நடித்திருப்பார். கமலும் அவரும் ஒருவரை ஒருவர் விரும்புவர். சிறீபிரியா அதற்குமுன் ஒரு காதல் தோல்வியடைந்திருப்பார். கிளைமாக்ஸில் கமல் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் சரிதாவை கல்யாணம் செய்துகொண்டுவிடுவார். புதுமணத்தம்பதிகளை சிறீபிரியா சந்திப்பார். அப்போது வரும் உரையாடலை கிழே அவ்வடிவில் கொடுக்கிறேன்.

சிறீபிரியா கமலிடம் " நீங்க எந்த பொண்ணை பார்த்தாலும் ஒரு கேள்வி கேட்பீங்க வுமன்ஸ் லிபரேஷனை பத்தி அதை உங்க மனைவியிடம் கேக்கலியா"

சரிதா வெகுளியாய் "என்ன சொல்றீங்க?"

கமல் "பெண்கள் சுதந்திரத்தை பற்றி நீ என்ன நினைக்கிறன்னு கேக்கிறாங்க"

சரிதா அதே வெகுளித்தனத்துடன் " அதப்பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது"

சிறீபிரியா " அதனாலதான் நீங்க சந்தோஷமா இருக்கீங்க"

அப்போது என் அம்மா " ஏண்டா இதைப்போய் பாத்திட்டு இருக்கே. வேற எதாவது நல்ல படம் மாத்துடா"

இப்படம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. பெண்களின் நிலைப்பற்றி பெரும்பாலான பெண்களே சிந்திக்கின்றனரா என்று தெரியவில்லை. எனக்கென்னவோ நிறைய பெண்கள் இப்படி இருப்பதையே விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. இப்போது வரும் டிவி தொடர்களும் பெண்களை பின்னோக்கியே கொண்டுசெல்ல விழைகின்றனர். அத்தொடர்களுக்கு பெரும்பான்மை ஆதரவு பெண்களிடமிருந்துதான்.

இன்னும் சில திரைப்படங்களிலும், தொடர்களிலும் காட்டப்படும் ஒரு காட்சி தாலிகட்டுவதற்கு முன் மாப்பிள்ளை வீட்டார் தகராறு பண்ணுவர் உடனே பெண்ணின் அப்பா "அய்யா இப்ப வந்து கலியாணத்தை நிறுத்தினா அப்புறம் எம்பொண்ணை யாருப்பா கட்டுவா". அப்படியும் அவர்கள் போய்விட்டால் உடனே பெண்ணின் அப்பா அங்கே அமர்ந்திருக்கும் ஒரு மாமன் மகனோ அல்லது அத்தை மகனிடமோ சென்று "தம்பி நீதான் எம்பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்கணும்" என்று கெஞ்சுவார். அதைப்பார்க்கும் நம் பெண்களும் ஆஹா என்ன தங்கமான பையன் என்று சர்ட்டிபிகேட் கொடுப்பனர். இந்த காட்சிகளை பார்க்கும் போது எனக்கு பெரும்பாலும் பி.பி எகிறிவிடும். என் மனதுக்குள் "இதை உருவாக்கியவன் உங்களையெல்லாம் கேவலப்படுத்தறான் ஆனால் நீங்க என்னடான்ன உச்சு கொட்டிட்டு இருக்கீங்களேன்னு " கத்திட்டு இருப்பேன்.

சுதந்திரம் என்பது பெண்களுக்கு மற்றவர்கள் குடுக்க கூடியதில்லை. அதை அவர்களே உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று. தாங்கள் பெண்கள் அதனால் இப்படிதான் இருக்க வெண்டும் என்ற மனப்பாண்மையிலிருந்து பெண்கள் வெளிவந்தால்தான் நாம் அடுத்த நிலைக்கே போகமுடியும். இப்போதே நிறைய பெண்கள் அப்படி வெளிவந்து நன்றாக தான் வாழ்கிறார்கள். என்ன இது பெருநகரங்களில்தான் நடக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகமாக அதிகமாகத்தான் உண்மையான பெண் சுதந்திரம் உருப்பெறத்தொடங்கும்.

2 comments:

கயல்விழி said...

//"அய்யா இப்ப வந்து கலியாணத்தை நிறுத்தினா அப்புறம் எம்பொண்ணை யாருப்பா கட்டுவா". //

இப்படியான கட்டத்தில் நான் கூட நினைப்பதுண்டு. ஒரு கலியாணம் நடக்காவிட்டா வாழ்க்கையே அழிந்து விட்டதான என்று?

தற்பொழுது மாற்றங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளன முழுமை அமைய சில காலம் தேவை போல. அண்மையில் எங்கோ வாசித் நினைவு. திருமண வேளையின் போது குடித்து விட்டு லேட்டாக வந்த மணமகனை வேண்டாம் என்று மணமகள் புரட்சிகரமாய் திருமணத்தை நிறுத்தினார் என்று வாசித்தேன்.

Chandravathanaa said...

நல்ல பதிவு.

சுதந்திரம் என்பது பெண்களுக்கு மற்றவர்கள் குடுக்க கூடியதில்லை.
அதை அவர்களே உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று.

அப்பட்டமான உண்மை.