Friday, August 05, 2005

இன்றே கடைசி! திங்கள் முதல் புது ரிலீஸ்..............

எக்சிட் இன்டர்வியு முடிச்சாச்சு!
ரிலீவிங் ஆர்டர் வாங்கியாச்சு!
ஃபேர்வெல் மெஸெஜ் அனுப்பியாச்சு!
பசங்கிட்ட எல்லாம் சொல்லியாச்சு!
பொண்ணுக்கிட்டயும் தான்!

இனி

புது வேலை!
புது ஆபிஸ்!
புது ஆளூக!
கலக்கல்தான் போங்க...

ஏர்டெல் எதோ பாயிண்ட் இல்லைன்னு கனெக்ஷன் குடுக்க மாட்டேனுட்டானுக. போய் டாடா இன்டிகாம் கிட்ட பேசனும். இணைய கனெக்ஷ்ன் வீட்டுக்கு குடுக்கணும். திரும்பவும் எழுதனும். நிறைய கத்துக்கனும்.

ஆதலால் நண்பர்களே அதுவரை Have Fun

வாழ்த்துகளுடன்

வெற்றி திருமலை

Thursday, August 04, 2005

சாதி என்றொரு மாய்ப்பிசாசு

காஞ்சி பிலிம்ஸ் "இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு?" என்ற பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை பார்த்த போது எழுத நினைத்தவை இவை.

இட ஒதுக்கீட்டை விட்டு விடுவோம். என் மனதுள் எழும் கேள்வி இதுதான்.

பிறப்பால் ஒரு மனிதன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பிரிப்பது சரியா?

இக்கேள்வியை எழுப்பிய உடனே இணையத்தில் அதிகமாக எழுதிவரும் சில நடுநிலைவாதிகள்(?), நாங்களும் அதைத்தான் சொல்லி வருகிறோம் என்று விளம்புவார்கள்.

ஆனால் அவர்களின் எத்தனை பேர் தங்களின் உள்மனதில் "தாங்கள் உயர்ந்தவர்கள்" என்ற எண்ணம் இல்லாமலிருப்பவர்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களின் எழுத்தை தொடர்ச்சியாக வாசித்த போதுதான் தெரிகிறது அவர்கள் ஆங்காங்கே அவர்களையறியாமல்(?) வெளிப்படுத்தும் அந்த உயர்வு மனப்பாண்மை.

நான் பிராமணனகாக பிறந்ததிற்கு பெருமையடைகிறேன் என்று டோன்டு ஒரு பதிவில் கூறினார்(சமீபத்தில்தான் படித்தேன்). இதில் பெருமையடைவதிற்கு என்ன இருக்கிறது.
இதேபோல் நான் ஒரு பள்ளனாக பிறந்ததிற்கு பெருமையடைகிறேன் பறையனாக பிறந்ததிற்கு பெருமையடைகிறேன் என்று கூற முடியமா? அப்படியே கூறினாலும் மக்கள் ஒரே அளவுகோலில் பார்ப்பார்களா?
இதையும் சொல்லிவிட்டு நான் சாதி வித்தியாசம் பார்ப்பது இல்லை என்று கூறுகிறீர்களே இது உங்களுக்கு நெருடலாயில்லை? இந்த ரெண்டு விஷயத்தில் எதோ ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும்.
அதை மட்டும் சொல்லிவிடலாமே.
மனதுக்குள் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுவதைவிட நினைத்ததை நேரிடையாகவே சொல்லிவிட்டால் குறைந்தபட்சம் உங்களின் மனதுக்காவது துரோகம் பண்ணாத பெருமை கிடைக்கும்.

சாதி பற்றி எழுதுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் ஒளிவு மறைவில்லாமல் உங்கள் கருத்தை கூறுங்கள் அல்லது அதைப்பற்றி எழுதாமலே விட்டுவிடுங்கள். அதைவிட்டுவிட்டு ஆதரிக்காமாதிரி எதுக்கறது, எதிர்க்கிற மாதிரி ஆதரிக்கறது என்ற அறிவுஜீவி முயற்சிகள் வேண்டாம்.

(பி.கு:- இந்த பதிவுலும் அனானிமஸ் பின்னுட்டங்களுகான வசதியை எடுத்துவிட்டேன், ஏனென்றால் முகம் தெரியாமல் வந்து ஒருவரை வசைபாடுவது எனக்கு பிடிக்காது. அதற்கு பின்னூட்டங்கள் ஒன்றும் வரமாலிருப்பதே மேல்)

Thursday, July 28, 2005

என் வலைப்பூ பயணம் ..........

ஒன்றிரண்டு பதிவுகளில் பின்னூட்டமிட்டுருந்தாலும் வலைப்பூ ஆரம்பிக்கும் முன் நிறைய யோசிக்க வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் முதலில் நோக்கத்தை தெளிவுபடுத்திக்கொண்டால் தான் வெளிப்பாடு அதற்கு தக்கமாதிரி இருக்கும் என்று.

கீழ்கண்ட விஷயங்களுக்காக எழுதப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.

அடுத்தவர்களை திருத்துவதற்கு(நம்மாலேயெ இன்னும் கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை இதில என்ன போய் மத்தவங்களுக்கு சொல்றது)

பிரபலமாவதற்கு(அந்த கஷ்டம் நமக்கு வேண்டாம்டா என்று முடிவெடுத்துவிட்டேன்)

புரட்சி செய்வது( தமிழ்நாட்டில் அந்த வார்த்தையே கேவலப்படுத்திட்டாங்க, இப்ப ஸ்கூல் பசங்ககிட்ட போய் செ குவாரா அப்படின்னு ஒரு புரட்சிக்காரர் தென் அமெரிக்காவில் இருந்தார் அப்படின்னு சொன்ன அவங்க அவரை விஜயகாந்த், சத்தியராஜ், பாக்கியராஜ், முரளி கூடவெல்லாம் மனசுக்குள்ள ஒப்பிட்டு கேவலப்படுத்திடுவாங்க)

அப்புறம் என்ன மயித்துக்கு எழுதறது, கம்னு கடாசிராலமன்னு ஒரு எண்ணம் வேற. அப்பத்தான் ஒரு விடை கிடைத்தது.
என் திருப்திக்கு எழுதலாம்னு. வாழ்க்கையில் மனிதனக்கு அவன் ஈகோ வை திருப்திதான்றதுதான் பெரிய Challengeனு நினைக்கிறேன்.

சரின்னு எழுதலாம்னு ஆரம்பித்து ஒரு ஏழு பதிவும் எழுதியாச்சு. அப்பத்தான் தோணியது எழுதுவது எவ்வளவு கடினம் என்று. கைவலித்தது என்பது கூட பெரிய விஷயமில்லை ஆனால் நினைத்ததை எழுத்துக்குள் கொண்டுவருவது இருக்கிறதே அதுதான் பெரிய விஷயம்.
எழுதன பதிவெல்லாம் இப்ப வாசித்ததுக்கு பிறகுதான் தோணுது இன்னும் அதையெல்லாம் நல்லா எழுதியிருக்கலாம் என்று. அதுபோக எழுதிய பெரும்பாலான விஷயங்கள் பிரச்சாரப்பட பாணியில் இருந்ததை காணமுடிந்தது. இதற்காக நான் வருத்தபடவில்லை இருந்தாலும் சிலர் அவர்களின் பொன்னான நேரத்தை செலவிட்டு அவைகளை வாசித்து இன்னும் சிலர் அதற்கு பின்னூட்டமும் இட்டிருந்தனர்.
அவர்களின் பொறுமைக்கு என் நன்றி.

தற்போது நான் பணிமாறபோவதால் இனி அதிகம் எழுத நேரமும் வசதியும் கிடைக்குமா என்று தெரியவில்லை. எனவே கிடைத்த நேரத்தில் இவ்விஷயங்களை எழுத நினைத்தேன், எழுதி விட்டேன்.

பார்போம் தோழர்களே (இதைப்பார்த்து நான் கம்யூனிஸ்ட்னு யாரும் தப்ப நினைச்சிடாதீங்க)

Wednesday, July 27, 2005

பெண் சுதந்திரம்

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம். கிருபாகரன் என்று ஒரு தமிழ் வாத்தியார் இருந்தார். வகுப்பில் காமெடியாக பேச தெரியாவிட்டாலும் நன்றாகதான் எடுப்பார். ஆனால் எனக்குதான் எப்படி முயற்சி பண்ணினாலும் தூக்கம் வந்துவிடும். ஒரு முறை அவர் ரெம்ப கோபமாக "ஏம்பா திருமலை உன்னால வகுப்பை அட்டென்ட் பண்ண முடியாட்டி வெளிய போயிடு" அப்படின்னார். எனக்கு செருப்பால் அடிச்ச மாதிரி இருந்தது.

அதன்பிறகு தூங்காமல் பாடம் கவனிக்க கற்றுக்கொண்டேன் ஆனாலும் அவர் எப்போதும் ஒரு முறைப்பாகத்தான் என்னை பார்ப்பார். இந்நிலையை ஒரு சந்தர்ப்பம் மாற்றியது. ஒருமுறை சிலப்பதிகாரம் வகுப்பு எடுத்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கேள்வியை கேட்டார்." கண்ணகி கதாபாத்திரம் எதனை உணர்த்துகிறது" என்று. சிலர் தமிழ்நாட்டு கலாசாரத்தை என்றனர். சிலர் பெண்ணின் மேண்மையை என்றனர். நான் சடாரென எழுந்து "ஆணாதிக்க இலக்கியத்தை" என்றேன்.
எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக் பார்த்தனர். ஆனால் அவர் "திருமலை சொல்வது சரிதான்" என்றார்.

அதன்பிறகு எங்களுக்குள் ஒரு நல்ல உறவு உருவானது, ஆனால் இந்த விஷயத்தை பற்றி அதன் பிறகு நாங்கள் என்றுமே பேசியதில்லை. ஆனால் அவ்விடை என்னுள் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணியது. எப்படி அந்த விடையை சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. பிறகு நான் படித்தவைகளும் எனக்கு அதைதான் உணர்த்தியது.

ஆனாலும் என்னை மிகவும் பாதித்தது எங்கள் வகுப்பில் இருந்த பெண்களின் ரியாக்ஷன். யாருக்குமே நடந்தது தெரிந்த மாதிரி தெரியவில்லை. ஒருவேளை எல்லோரும் விழித்துகொண்டே தூங்கிகொண்டிருந்தனரோ என்னவோ?

சிலகாலம் கழித்து டிவியில் "அவள் அப்படித்தான்" படம் போட்டிருந்தார்கள். அதில் கமல் ஒரு நிருபராக நடித்திருப்பார். அவர் எந்த பெண்ணை பார்த்தாலும் "பெண்களின் சுதந்திரத்தை பற்றி என்ன நினைக்கீறீங்க" என்று கேள்வி கேட்பார். சிறீபிரியா ஒரு முற்போக்குவாதியாக் நடித்திருப்பார். கமலும் அவரும் ஒருவரை ஒருவர் விரும்புவர். சிறீபிரியா அதற்குமுன் ஒரு காதல் தோல்வியடைந்திருப்பார். கிளைமாக்ஸில் கமல் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் சரிதாவை கல்யாணம் செய்துகொண்டுவிடுவார். புதுமணத்தம்பதிகளை சிறீபிரியா சந்திப்பார். அப்போது வரும் உரையாடலை கிழே அவ்வடிவில் கொடுக்கிறேன்.

சிறீபிரியா கமலிடம் " நீங்க எந்த பொண்ணை பார்த்தாலும் ஒரு கேள்வி கேட்பீங்க வுமன்ஸ் லிபரேஷனை பத்தி அதை உங்க மனைவியிடம் கேக்கலியா"

சரிதா வெகுளியாய் "என்ன சொல்றீங்க?"

கமல் "பெண்கள் சுதந்திரத்தை பற்றி நீ என்ன நினைக்கிறன்னு கேக்கிறாங்க"

சரிதா அதே வெகுளித்தனத்துடன் " அதப்பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது"

சிறீபிரியா " அதனாலதான் நீங்க சந்தோஷமா இருக்கீங்க"

அப்போது என் அம்மா " ஏண்டா இதைப்போய் பாத்திட்டு இருக்கே. வேற எதாவது நல்ல படம் மாத்துடா"

இப்படம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. பெண்களின் நிலைப்பற்றி பெரும்பாலான பெண்களே சிந்திக்கின்றனரா என்று தெரியவில்லை. எனக்கென்னவோ நிறைய பெண்கள் இப்படி இருப்பதையே விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. இப்போது வரும் டிவி தொடர்களும் பெண்களை பின்னோக்கியே கொண்டுசெல்ல விழைகின்றனர். அத்தொடர்களுக்கு பெரும்பான்மை ஆதரவு பெண்களிடமிருந்துதான்.

இன்னும் சில திரைப்படங்களிலும், தொடர்களிலும் காட்டப்படும் ஒரு காட்சி தாலிகட்டுவதற்கு முன் மாப்பிள்ளை வீட்டார் தகராறு பண்ணுவர் உடனே பெண்ணின் அப்பா "அய்யா இப்ப வந்து கலியாணத்தை நிறுத்தினா அப்புறம் எம்பொண்ணை யாருப்பா கட்டுவா". அப்படியும் அவர்கள் போய்விட்டால் உடனே பெண்ணின் அப்பா அங்கே அமர்ந்திருக்கும் ஒரு மாமன் மகனோ அல்லது அத்தை மகனிடமோ சென்று "தம்பி நீதான் எம்பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்கணும்" என்று கெஞ்சுவார். அதைப்பார்க்கும் நம் பெண்களும் ஆஹா என்ன தங்கமான பையன் என்று சர்ட்டிபிகேட் கொடுப்பனர். இந்த காட்சிகளை பார்க்கும் போது எனக்கு பெரும்பாலும் பி.பி எகிறிவிடும். என் மனதுக்குள் "இதை உருவாக்கியவன் உங்களையெல்லாம் கேவலப்படுத்தறான் ஆனால் நீங்க என்னடான்ன உச்சு கொட்டிட்டு இருக்கீங்களேன்னு " கத்திட்டு இருப்பேன்.

சுதந்திரம் என்பது பெண்களுக்கு மற்றவர்கள் குடுக்க கூடியதில்லை. அதை அவர்களே உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று. தாங்கள் பெண்கள் அதனால் இப்படிதான் இருக்க வெண்டும் என்ற மனப்பாண்மையிலிருந்து பெண்கள் வெளிவந்தால்தான் நாம் அடுத்த நிலைக்கே போகமுடியும். இப்போதே நிறைய பெண்கள் அப்படி வெளிவந்து நன்றாக தான் வாழ்கிறார்கள். என்ன இது பெருநகரங்களில்தான் நடக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகமாக அதிகமாகத்தான் உண்மையான பெண் சுதந்திரம் உருப்பெறத்தொடங்கும்.

Tuesday, July 26, 2005

அவரும் ஒரு மனிதன் தானே-----

இன்றைய வலைப்பதிவுகளில் ரஜினியை பற்றி யார் எழுதினாலும் உடனே பின்னூட்டங்கள் குவிந்து விடுகின்றனர். பாதிப்பேர் ஆதரவளிக்கின்றனர் மீதிப்பேர் எதிர்கின்றனர். பத்தாதற்கு மாறி மாறி வசைச்சொற்கள் வேறு பயன்படுத்தபடுகின்றனர்.

இதற்கான காரணங்களை அலச ஆரம்பித்ததின் தொடக்கம்தான் இந்த பதிவு.
முதலில் ரஜினி யார்?
அவர் கர்நாடகத்திலிருந்து வந்தவர், மகராஷ்டிரத்திலிருந்து வந்தவர் என்று நிறைய பேர்களும் நான் முதலில் ஒரு இந்தியன் பிறகு ஒரு தமிழன் என்று அவரும் கூறுகின்றனர்.
ஆனால் என்னை பொருத்தவரை முதலில் அவர் ஒரு மனிதன்.

ஒரு மனிதன், அவர் மட்டுமல்ல நாமெல்லோரும்தான், வாழ்வில் என்ன செய்கிறோம்? முதலில் படிக்கிறாம், அது முடிந்தவுடன் பிழைக்க ஒரு வேலை தேடுகிறோம். ஆரம்பத்தில் பிடித்த வேலையாக் தேடுகிறோம் அது கிடைத்தால் சந்தோஷம் இல்லாவிட்டால் பொழப்புக்காக ஒரு வேலையை தேடி அதில் அமர்கிறோம். இதில் சிலர் அவரவர் சொந்த இடத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு, நாடுகளுக்கும் செல்கின்றனர். அதன்பின் சேமிக்க,சொத்து சேர்க்க, சமூகத்தில் பேர் புகழ் அடைய, அவரவர் தகுதிக்கேற்ப முயல்கிறோம்.
இதைத்தானே அவரும் செய்தார்.

நான் ரஜினி படங்களை சிறுவயதில் இருந்தே பார்த்து வருகிறேன். நான் என்ன அவர் சந்தோஷத்துக்கா பார்க்கிறேன். என் சந்தோஷத்துக்காக என் மனமகிழ்வுக்காக பார்க்கிறேன். இதில் அவர் என்னிடமிருந்து கொள்ளையடிக்கிறார் என்று சொல்ல முடியுமா!. என்னைபோல பலரை மகிழ்விப்பதால் அதனால் பயன் அடையும் வியாபாரிகள் அவருக்கு அச்சம்பளம் கொடுகின்றனர். இதை குற்றமென்று சொல்ல முடியுமா. அவர் அப்பணத்தை என்ன செய்கிறார் என்பது அடுத்து விவதத்துகான விஷயம்.

இப்போது நான் வெளிமாநிலத்தில் இருக்கிறேன். என் அண்ணன் தங்கைகள் என் சொந்த ஊரில் இருக்கின்றனர். என் தகுதிக்கேற்ப இவ்விடத்திலும், சொந்த ஊரிலும் சொத்து வாங்க முயலுவேன். இதை தப்பு என்று யாராவது கூற முடியுமா?
சிலர் சொல்வது போல் ரஜினிக்கு போயஸ் கார்டன், கேளம்பாக்கம் மட்டும் தமிழ்நாட்டில் சொத்துக்கள் அல்ல. அதுபோக நிறைய தமிழ்நாட்டு நிறுவனங்களிலும் அவர் பங்குகள் வைத்துள்ளார். காசு கொடுத்தமா படம் பார்த்தாமான்னு வரனும். அதைவிட்டு நாங்க கொடுத்த காசை நீங்க இப்படித்தான் செலவு செய்ய வேண்டும் என்று சொல்ல கூடாது. நம்ம முதலாளி நீ சம்பளத்தை நான் சொல்றமாதிரிதான் செலவு செய்யனும்னு சொன்னா எவ்வளவு தப்போ அது மாதிரிதான் இதுவும்.

சிலர் ரஜினியை வெறுப்பதற்கு சில ரஜினி ரசிகர்களும் காரணம் என்று நினனக்கிறேன். எதாவது சொல்லிட்டா போதும் உடனே "எங்க தலைவனையா சொல்றே, டேய் டூய் "னு குதிக்க வேண்டியது. அவர்களுக்கு நான் சொல்லிக்க விரும்புவது, உங்களுக்கு பிடிச்சிருக்கா உங்களோட வெச்சுக்கங்க. மத்தவங்களுக்கும் பிடிக்கணும்னு நினைக்கதீங்க. பிடிக்காத் கருத்தை யாராவது சொன்னா நிதானமா அதற்கு பதில் கொடுங்க. அதைவிட்டுட்டு கசாமுசான்னு பேசாதீங்க.
இதற்கு ரஜினியின் செய்கை மூலமே ஒரு உதாரணம் தர விரும்புகிறேன். காவேரி பிரச்சினையில் நெய்வேலி மாநாட்டில் பாரதிராஜா ரஜினியை கன்னாபின்னா என்று திட்டி தீர்த்தார். அடுத்தநாள் ரஜினி உண்ணவிரதத்திர்க்கு கிளம்புவதற்கு முன் சில நிருபர்கள் அதைப்பற்றி கேட்டதற்கு அவர் "அவர் பேசியது தப்பு ரொம்ப தப்பு" என்று ஒற்றை வரியில் டீசண்டாக முடித்துகொண்டார். எனக்கு தெரிந்து ரஜினி இதுவரை அதைப்பற்றி எந்த பேட்டியிலும் பேசவில்லை. அதன் பின்னர் பாரதிராஜா கூட ரஜினியை பாராட்டி(என்ன விஷயமென்று மறந்து விட்டது) பேசினார்.

எனக்கும் ரஜினியை அவரது திரைப்படங்களையும் தாண்டி பிடிக்கும். அதற்கான காரணங்களை கீழே கொடுத்துள்ளேன்.

கருப்புநிற ஹிரோவாய் தமிழ் சினிமாவில் ஒரு Trend Setter.

சினிமாவில் மட்டுமே நடிப்பது

சின்ன சின்ன கட்சிகள் கூட சென்னையில் மாநாடு நடத்துகிறோம் என்று லாரியில் கூட்டம் சேர்க்கும் பொழுது தான் உண்ணாவிரதம் நடத்திய்போது வெளிமாவட்டங்களிலிருந்து யாரும் வரவேண்டாம் என்று கூறியது(வரச்சொல்லியிருந்தால் வந்த கூட்டத்தால் சென்னை ஸதம்பிட்த்து இருக்கும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை)

இன்றுவரை ரசிகர்களை தன் சுயலாபத்துக்காக பயன்படுத்தாமல் இருப்பது(மாற்றி கருத்து இருப்பவர்கள் பொருக்க, இதற்காக ஒரு பின்னூட்டத்தை வீண் செய்ய வேண்டாம், இது என் கருத்து)

ஒரு படத்திற்கு பத்து கோடிவரை குடுக்கும் தயாரிப்பாளர்கள் இருக்குபோது கூட காசுக்காக படம் பண்ணாமல் நிதானமாக காலம் எடுத்து படம் செய்வது

ஜெயலலிதாவை தீவிரமாக எதிர்த்த நிலையிலும் அவரின் தன்னம்பிக்கை என்னை கவர்ந்த விஷயம் என்று சொன்னது(அதற்கு பிறகு ஜெ போராடி ஜெயித்த விஷயம் அவரின் தன்னம்பிக்கையை உலகிற்கு பறைசாற்றியது)

பாமாக அவர் படத்திற்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட போது ரசிகர்களை வன்முறையில் ஈடுபடச்செய்யாமல் அடக்கி வாசித்தது(ரசிகர்கள் பாதிப்படையக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில்)

நேற்று முளைத்த சிறு நடிகர்கள் கூட எங்கள் படம் பிளாப்பில்லை வியாபாரரீதியில் லாபம்தான் என்று கூறும்போது 5 கோடிக்கு மேல் லாபம் பார்த்த பாபா படத்தை பிளாப் என்று பெருந்தென்மையாக கூறியது

இன்னும் நிறைய இருக்கிறது. இப்போதைக்கு இதுபோதும் என்று நினைக்கிறேன்.

இதைப்போலவே அவரிடம் பிடிக்காத சில விஷயங்களும் சில இருக்கின்றன. அவை

இவர் பெயரை உபயேகித்து அவர் குடும்பத்தினர் செய்யும் சில கூத்துக்கள்(உதாரணமாக ரஜினி 25 நிகழ்ச்சி- இதற்கு அவர் உண்மையாகவே அவர் உடன்பட்டாரா என்று தெரியவில்லை)

அவரை சுற்றி இருக்கும் ஒரு காக்காய் கூட்டம்(பாபா படத்தின்போது இவர்களின் சில செய்கைகளினால் நிறைய விமர்சினங்கள் எழுந்தனர்)

அவசரப்பட்டு எடுத்த சில அரசியல் முடிவுகள்(இதற்கு அந்த காக்காய் கூட்டமும் காரணம் என்று நினைக்கிறேன்) ஏனென்றால் இந்த முடிவுகள் எடுப்பதற்குமுன் சாதாரண மக்கள் சிலரை சந்தித்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் சும்மாயிருந்திருக்க வேண்டும்.

அவர் படங்களில் வரும் சில தேவையில்லாத தனிமனித துதிபாடல் வசனங்கள்(உதாரணமாக சந்திரமுகியில் பிரபு ரஜினியைப்பற்றி பேசும் சில வசனங்கள்)

எல்லத்தையும் சீர்தூக்கி பார்க்கும் போது அவர் மத்தவங்களுக்கு கெடுதல் செய்யாதவராகவே தெரிகிறார். மத்தவங்களுக்கு நல்லது பண்ணாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் கெடுதல் நின்னக்காம இருந்தாலே போதும் என்பது என் கருத்து.

பின்குறிப்பு:
இன்னும் நிறைய எழுத நினைத்தேன் ஆனால் கைவலிப்பதால் அதை சமயம் கிடைக்கும்போது இன்னொரு பதிவில் பதிக்கிறேன்.

Thursday, July 21, 2005

ஏன் அவர்களை இப்படி?

இந்த விஷயம் ரொம்ப நாளாகவே என் மனதில் உறுத்திகொண்டிருந்தது. இன்றுதான் அதை பதிவு பண்ண ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. என்னடா இன்னும் விஷயத்தையே என்னன்னு சொல்லாம பினாத்திகிட்டு இருக்கானேன்னு சபிக்கறதுக்கு முன்னாடி சொல்லிடறேன் இது பாலியல் தொழிலாளர்களை பற்றியது.

அப்பப்ப தினசரிகளில் அழகிகள்(?) கைது அப்படின்னு கட்டம் கட்டி படத்தோட செய்தி வரும் அதுலவேற நம்ம தொப்பை போலீஸ் போஸ் கொடுத்துக்கிட்டு நிப்பாய்ங்க. அப்பத்தான் யோசனை வரும் அந்த பாவப்பட்ட அழகிகள் அப்படி என்ன குத்தம் செஞ்சிட்டாங்கன்னு இப்படி போட்டு மானத்தை வாங்குரானுகண்னு.

மும்பை கமிஷனர் ஒருவர் கூட ஒருமுறை சொன்னார். மும்பையில் இருக்கும் ஆண்களில் 60% பேர் பிரம்மசாரிகள் அவர்களுக்கு பெரும் வடிகாலாய் இருப்பது பாலியல் தொழிலாலர்கள்தான். அத்தொழிலை நிறுத்தினால் வீதியில் போகும் குடும்ப பெண்களுக்கு அது ஆபத்தாகிவிடும் என்று.

அப்படி உடல் அரிப்பெடுத்து சுகத்துக்காக அலையும் மனிதர்கள் மத்த குடும்ப பெண்களிடம் சில்மிஷம் செய்யாமல் தடுத்து அவர்களின் அரிப்பை தீர்த்து அதற்கு கூலியை பெற்றுக்கொள்கிறார்களே அதுவா பெரிய தப்பு? எதற்கெடுத்தாலும் போரடும் மனித உரிமை, மகளிர் அமைப்புகள் ஏன் இவர்கள் அவமானபடுத்துவதை மட்டும் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்று தெரியவில்லை

என்ன அவங்க வேற வேலையிருந்து அதை பண்ணாமய இந்த தொழிலுக்கு வராங்க. எதோ வயித்து பொழப்புக்கு வேற வழியில்லாம் இதை பண்ண வேண்டியதா இருக்குது. இதில்லாம வெறும் உடலைக்காட்டும் டான்ஸ் மட்டும் செஞ்சு குடும்பத்தை பார்த்துகலாம்னா அதுக்கும் அரசாங்கம்(மும்பை) ஆப்பு வெச்சிருச்சி. டான்ஸ் பார் தடைக்கு அப்புறம் பேட்டி கொடுத்த பெண்களெல்லாம் "எதோ உடம்ப மட்டும் காட்டி பொழப்ப பார்த்துகிட்டு இருந்தோம். இனி உடலை விக்கிறதை தவிர வேற வழியில்லை" என்று சொன்னார்கள். டான்ஸ் பார்களின் தடைகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் 5000 கும் மேலயாம். எதோ கமிஷன் தகராறுல மும்பை அரசாங்கம் அவங்க வயித்தில அடிச்சிருச்சு.

இங்க தமிழ்நாட்டுல என்னடான்னா மாசக்கடைசியில் கேசு கிடைக்கலியா அவங்களை பிடித்து உள்ள போடு என்கிறமாதிரி கொதறிவிடுகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு இதை சட்டரீதியா அங்கீகரித்துவிடுவதுதான் என்று நினைக்கிறேன். கூடவே ஒரு லைசன்ஸ் முறையும் கொண்டுவந்திட்டா அவங்க சம்மதிமல்லாமல் தொழிலுக்கு அழைத்துவரப்படுகிறவர்களையும் காப்பாற்றி சம்பந்தபட்டவங்க மேல நடவடிக்கை எடுக்கலாம். எந்த அரசாங்கம் தைரியத்துடன் இதை செய்யப்போகிறதென்று தெரியவில்லை. பார்ப்போம்?

Tuesday, July 19, 2005

சல்மான் கான் ஒரு தேசத்துரோகி சொல்கிறது பா ஜ க!

மும்பை திரைப்பட உலகிலிருந்து ஒரு குழு பாஜக தலைவர் கோபிநாத் முன்டேயை சந்தித்துவிட்டு தோல்வியுடன் திரும்பியிருக்கிறது. அவர்களின் கோரிக்கை "சல்மான்கானின் பிரச்சினைக்காக தயாரிப்பாளர் காசு போட்டு படமெடுக்கும் படத்தை ஏன் ஒட விடாமல் தடுக்க வேண்டும். அதனால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதே". அதை முடியாது(பின்னே அத்வானி உளறலுக்கு பிறகு உருவான பிரச்சினையை திசை திருப்ப இதைதானே பயன்படுத்த முடியும்) என்று மறுத்த அவர் படத்துக்கு எதிரான் போராட்டம்(?) தொடரும் என்று சொல்லிவிட்டார்.

அதற்கப்புறம் தான் இந்த காமெடியான் ஐட்டத்தை செய்தியில் படித்தேன். சல்மான்கான் ஒரு தேசத்துரோகி என்று பாஜக'வினர் சொல்கின்றனர் என்று.

ஒருநாள் பாராளுமன்றம் நடத்த எவ்வளவோ கோடி செலவாகுதாமா! ஆனா இந்த கட்சி வாரக்கனக்குல அதை நடத்த முடியாம் பண்ணிச்சே அப்ப எவ்வளவு பணம் நாட்டுக்கு நட்டம். எவ்வளவு பிரச்சனையை கவனிக்காம் இருந்திருப்பாய்ங்க. அது தேசத்துரோகமில்லையா??

நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்கும்போது ஒண்ணுமில்லாத பாபர் மசூதி பிரச்சினையை ஊதி பெருசு பண்ணினாய்ங்களே அது தேசத்துரோகமில்லையா??

இதிலே இவிங்க அடுத்தவங்களை(குடிபோதையில் ஒரு நடிகர் பேசிய வார்த்தைகளை வைத்துகொண்டு அதுவும் இன்னும் விசாரணையிலிருக்கும் நிலையில்) சொல்கிறாய்ங்க!!!!

அட தேவுடா!!!!!!!!!!!!

Friday, July 15, 2005

ஒரு காதல் கவிதை

என் நண்பன் ஒருவன் அனுப்பி வைத்த கவிதை(?)

Thursday, July 14, 2005

நெஞ்சு பொறுக்குதில்லையே !!!!!

என் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவனது தந்தை ஒரு ரோடு காண்டிராக்டர்.
கொஞ்ச காலம் முன்பு ஒரு ரோடு காண்டிராக்டு (ரூபாய் 20 கோடி மதிப்பு) விஷயமாக தமிழகத்தை சேர்ந்த ஒரு மத்திய மந்திரியை பார்க்க போயிருந்தார்களாம் அதுவும் சும்மாயில்லை ஒரு பலமான சிபாரிசோடு. அவரின் பிஏ எல்லாம் விசாரித்துவிட்டு சொன்ன விஷயம் 10% கமிஷன் கொடுத்துவிட்டு காண்டிராக்டு எடுத்துகொள்ளலாம் என்று. நான் அதிர்ச்சியாகி 10% என்றால் அதிகமில்லையா என்றேன். அதற்கு அவன் இது தான் கரண்ட் ரேட் என்றான். அதற்கப்புறம் சேகரித்த விஷயங்களை கீழே தருகிறேன்.

மந்திரி கமிஷன் -> 10 %
RTO கமிஷன் -> 1-2% (லாரிகளில் ஒரு குறிப்பட்ட அளவுதான் ஜல்லி எடுத்துசெல்ல வேண்டுமாம் ஆனால் அதன்படி செயல்பட்டால் அதிக லாபம் பார்க்க முடியாது எனவே இந்த கமிஷன் இதற்கு மேலும் கூட ஆகலாமாமம் ஆனால் இது அவருக்கு மட்டுமல்ல அலுவலகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் சேர்த்துதான்)
Bill பாஸ் கமிஷன் -> 1-2% (பில் பாஸ் பன்னும் அதிகாரி வேண்டுமென்றே நாள் கடத்துவாராம் அவரை சரிகட்ட இது)
உள்ளூர் எம் எல் ஏ -> 2% (இது ஒரு எழுதப்படாத விதி)
காண்டிராக்டு சிபாரிசு செய்தவர்க்கு - 1%
மத்த Adjustments -> 5% (மாமா வேலை பார்க்கறதுக்கும் சேர்த்துதான்)
காண்டிராக்டர் லாபம் -> 15%- 20%

இதெல்லாம் சேர்த்தே கிட்டத்தெட்ட 35%. அப்போ அரசாங்கம் குறிப்பட்ட ஒரு ரோடு போட 100 ரூபாய் ஒதுக்கினா போட்டப்பட்ட ரோடோட மதிப்பு 65 ரூபாய்தான். இந்த காண்டிராக்டு ஒரு தேசிய நெடுஞ்சாலைக்கானது. இங்கு தரத்தை ஒரளவாவது கடைப்பிடிக்கவேண்டும். இதுவே சாதாரண சாலைகள் என்றால் தரம் மிகவும் மட்டமாக இருக்கும். அங்க செலவு செய்யப்படும் தொகை இக்கணக்கின் படி பார்த்தால் நிச்சயம் 50 சதவிகித்திற்கும் குறைவாகத்தான் இருக்கும்.

ஆகவே, அரசாங்கம் வருடத்திற்கு 1000 கோடி ரூபாய் சாலை மேம்பாடுகளுக்கு ஒதுக்கினால் செய்யப்பட்ட பணியின் மதிப்பு கிட்டத்தெட்ட 600 கோடிக்குதான் இருக்கும். மீதி 400 கோடி பணந்தின்னி வல்லூறுகளுக்கு போய்விடும். இதுக்கு உலகவங்கிகிட்ட அப்பப்ப கடன் வேறு. கண்டவன் ஃபாரின் காரில் போவதற்கும், ஏ சி ரூமில் தண்ணியடிக்கவும், பொண்டாட்டிக்கு அவ எடைக்கு நிகராக தங்கம் போடுதற்கும், பசங்களை பாரின்ல படிக்க வைக்கிறதுக்கவும், நாம் வட்டி கட்டி மாரடிக்க வேண்டியதாயிருக்கு.


அட தேவுடா!!!!!!!!!!!!!!!!

Friday, July 08, 2005

நம் நாட்டின் தலையாய பிரச்சினை!!!!!

இன்றைய நிலைமையில் ஒரு மக்கள் கூட்டத்தில் போய்நின்று நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு என்ன காரணமென்று கேட்டால் ஊழல்,லஞ்சம்,அரசியல்வாதிகள், சாதி மற்றும் லேட்டஸ்ட்டாக மக்களின் அலட்சியம் என்று கூட பதில் வரும். ஆனால் நாமெல்லாம் வசதியாக ஒன்றை மறந்து விடுகிறோம் அதுதான் 'மக்கள்தொகை பெருக்கம்'.

இன்னும் எந்த அரசியல்கட்சியும் இந்த பிரச்சினையை தங்கள் அஜண்டாவாக எடுத்துகொள்ளவில்லை, எந்த திரைப்படத்திலும் இதை விவாதிக்கவில்லை, யாரும் இன்னும் இதை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.

அரசாங்கமும் அவ்வப்பொழுது 'நாமிருவர் நமக்கிருவர்' என்று ஆங்காங்கே எழுதிவிட்டு அதை கிடப்பில் போட்டுவிடுகிறது. ஆனால் இன்றைய நிலைமை என்ன?

காடுகள் கனிசமான அளவில் அழிக்கப்பட்டுவிட்டன.

அடிப்படை வசதிகளை மேம்படுத்துகிறாம், சாலைகளை அகலப்படுத்துகிறோம் என்று ஊருக்குள் இருக்கும் மரங்களை வெட்டித்தீர்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் இன்னும் சில காலங்களில் சுத்தமாக வற்றிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

நகரங்களை விரிவாக்குகிறோம் என்ற பெயரில் பக்கத்திலிருக்கும் கிராமங்களும் கபளீகரம் செய்யபடுகின்றன.

மழை வருடத்திற்கு வருடம் குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மரங்களின் எண்ணிக்கை குறைந்ததே என்றாலும் அதற்கு காரணம் மக்கள்தொகை பெருக்கம் என்பதில் மாற்று கருத்துக்கு இடமேயில்லை. குறிப்பாக பெங்களுரை நான் கடந்த ஐந்து வருடங்களாம் பார்த்து கொண்டு வருகிறேன். 2000,2001 ஆண்டுகள் மழை அபரிதமாக இருந்தது, அதுவும் ஏப்ரல், மே மாதத்தில் கூட மாலை வேளையில் தவறாது மழை பொழிந்ததை கண்டிருக்கிறேன். என்ன தான் சூரியன் நடு உச்சியில் இருந்தாலும் அது ஒருபோதும் சுட்டதில்லை. ஆனால் இன்று?
கடந்த ஏப்ரல், மேயில் மதிய வேளையில் வெளியில் தலைகாட்டமுடியவில்லை. பெரும்பாலான சாலையோர மரங்களை வெட்டிவிட்டார்கள். ஒன்றிரண்டு மழை மேகங்கள் நகருக்குள் வந்தாலும் குளிர்விக்கும் மரங்கள் இல்லாததால் டா டா காண்பித்து விட்டு போய்விடுகிறது. எதோ லால்பாக், கப்பன் பார்க்னு சில இடங்கள் இருப்பதால் அவ்வப்போது கொஞ்சம் மழை கண்ணில் படுகிறது.

இங்கயே இப்படினா தமிழ்நாட்டை நினைத்து பார்த்தாலே பயமாக இருக்கிறது. எந்த ஊருக்கு போனாலும் வறட்சி, புலம்பல். விவசாயம் செய்யும் மக்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள் ஆனால் தேவைகள் அதிகமாகிகொண்டே வருகிறது.

இவைகளுக்கெல்லாம் முக்கிய காரணியான மக்கள்பெருக்கத்தின் ஆபத்தை இன்னும் பெரும்பாலானோர் உணரவில்லை. நிலைமை இப்படியே நீடித்தால் நம் பேரக்குழந்தைகள் காலத்தில் எல்லோருக்கும் நிற்பதற்குதான் இடமிருக்கும். இன்றைய நிலைமையில் ரெண்டு குழந்தை பெறுவதே அதிகம் என்று தோண்றுகிறது. ஊருக்கு உபதேசம் என்பதைவிட முதலில் நாம் திருந்த வேண்டும் என்பதால் நான் ஒரு குழந்தை போதும் என்ற தீர்மானம் எடுத்துவிட்டேன். மற்றவர்கள் எப்படியோ?

யாராவது ஒரு திரைப்படம் இதைப்பற்றி எடுத்தால் பரவாயில்லை ஏன்னா மக்களுக்கு அதுதான் சீக்கிரம் போய்சேருகிறது.

Monday, July 04, 2005

அண்ணே வணக்கம்!!!!!!!!!!

என்னடா வலைப்பூ வலைப்பூ ங்கிறாய்ங்களே நாமளும் ரெண்டு எழுதிப்போட்டா என்னன்னு தோணுச்சு.....ஆனா எழுதலாம்னு ஆரம்பச்சதுக்கு அப்புறம் தான் குழப்பமே தொடங்குச்சு..
என்னத்தை ஆரம்பிக்கிறது...அதுல இந்த பான்ட் கொடைச்சல் வேற..அப்புறம் மனசில சில தலைப்புகள் - பெணகளின் நிலைப்பாடு, இந்தியப்பத்திரிக்கைகளின் பொருப்பிண்மை, சினிமா அரசியல் -இப்படின்னு பட்டியல் நிண்டுகிட்டே போச்சு ஆனா எதை ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சு தலை பிச்சுகிட்டதுதான் மிச்சம்.
அப்ப தான் ஒரு பல்பு பளீர்னு உள்ள எரிஞ்சுச்சு.... இந்த குழப்பத்தையே முதல் பதிவா போட்டு அரங்கேற்றம் பண்ணீட்டா என்னன்னு.

ஆதலால் வலைப்பூ மானிடர்களே ....இங்கனம் எனது முதல் பதிவு பதிக்கப்படுகிறது.