Friday, July 08, 2005

நம் நாட்டின் தலையாய பிரச்சினை!!!!!

இன்றைய நிலைமையில் ஒரு மக்கள் கூட்டத்தில் போய்நின்று நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு என்ன காரணமென்று கேட்டால் ஊழல்,லஞ்சம்,அரசியல்வாதிகள், சாதி மற்றும் லேட்டஸ்ட்டாக மக்களின் அலட்சியம் என்று கூட பதில் வரும். ஆனால் நாமெல்லாம் வசதியாக ஒன்றை மறந்து விடுகிறோம் அதுதான் 'மக்கள்தொகை பெருக்கம்'.

இன்னும் எந்த அரசியல்கட்சியும் இந்த பிரச்சினையை தங்கள் அஜண்டாவாக எடுத்துகொள்ளவில்லை, எந்த திரைப்படத்திலும் இதை விவாதிக்கவில்லை, யாரும் இன்னும் இதை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.

அரசாங்கமும் அவ்வப்பொழுது 'நாமிருவர் நமக்கிருவர்' என்று ஆங்காங்கே எழுதிவிட்டு அதை கிடப்பில் போட்டுவிடுகிறது. ஆனால் இன்றைய நிலைமை என்ன?

காடுகள் கனிசமான அளவில் அழிக்கப்பட்டுவிட்டன.

அடிப்படை வசதிகளை மேம்படுத்துகிறாம், சாலைகளை அகலப்படுத்துகிறோம் என்று ஊருக்குள் இருக்கும் மரங்களை வெட்டித்தீர்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் இன்னும் சில காலங்களில் சுத்தமாக வற்றிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

நகரங்களை விரிவாக்குகிறோம் என்ற பெயரில் பக்கத்திலிருக்கும் கிராமங்களும் கபளீகரம் செய்யபடுகின்றன.

மழை வருடத்திற்கு வருடம் குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மரங்களின் எண்ணிக்கை குறைந்ததே என்றாலும் அதற்கு காரணம் மக்கள்தொகை பெருக்கம் என்பதில் மாற்று கருத்துக்கு இடமேயில்லை. குறிப்பாக பெங்களுரை நான் கடந்த ஐந்து வருடங்களாம் பார்த்து கொண்டு வருகிறேன். 2000,2001 ஆண்டுகள் மழை அபரிதமாக இருந்தது, அதுவும் ஏப்ரல், மே மாதத்தில் கூட மாலை வேளையில் தவறாது மழை பொழிந்ததை கண்டிருக்கிறேன். என்ன தான் சூரியன் நடு உச்சியில் இருந்தாலும் அது ஒருபோதும் சுட்டதில்லை. ஆனால் இன்று?
கடந்த ஏப்ரல், மேயில் மதிய வேளையில் வெளியில் தலைகாட்டமுடியவில்லை. பெரும்பாலான சாலையோர மரங்களை வெட்டிவிட்டார்கள். ஒன்றிரண்டு மழை மேகங்கள் நகருக்குள் வந்தாலும் குளிர்விக்கும் மரங்கள் இல்லாததால் டா டா காண்பித்து விட்டு போய்விடுகிறது. எதோ லால்பாக், கப்பன் பார்க்னு சில இடங்கள் இருப்பதால் அவ்வப்போது கொஞ்சம் மழை கண்ணில் படுகிறது.

இங்கயே இப்படினா தமிழ்நாட்டை நினைத்து பார்த்தாலே பயமாக இருக்கிறது. எந்த ஊருக்கு போனாலும் வறட்சி, புலம்பல். விவசாயம் செய்யும் மக்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள் ஆனால் தேவைகள் அதிகமாகிகொண்டே வருகிறது.

இவைகளுக்கெல்லாம் முக்கிய காரணியான மக்கள்பெருக்கத்தின் ஆபத்தை இன்னும் பெரும்பாலானோர் உணரவில்லை. நிலைமை இப்படியே நீடித்தால் நம் பேரக்குழந்தைகள் காலத்தில் எல்லோருக்கும் நிற்பதற்குதான் இடமிருக்கும். இன்றைய நிலைமையில் ரெண்டு குழந்தை பெறுவதே அதிகம் என்று தோண்றுகிறது. ஊருக்கு உபதேசம் என்பதைவிட முதலில் நாம் திருந்த வேண்டும் என்பதால் நான் ஒரு குழந்தை போதும் என்ற தீர்மானம் எடுத்துவிட்டேன். மற்றவர்கள் எப்படியோ?

யாராவது ஒரு திரைப்படம் இதைப்பற்றி எடுத்தால் பரவாயில்லை ஏன்னா மக்களுக்கு அதுதான் சீக்கிரம் போய்சேருகிறது.

1 comment:

லதா said...

மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்ற கருத்தை வலியுறுத்தவே கேபி "அரங்கேற்றம்" படம் எடுத்தார் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.